செய்திகள்

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 07

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எனது இந்த 7 ஆவது பதிவை எழுதுகிறேன். இடையில் ஏற்பட்ட இந்த தாமதத்துக்கு வருந்துகிறேன்.

எனது கடந்த பதிவில் எவ்வாறு அல்பிரட் துரையப்பாவை கொலை செய்யும் நோக்குடன் அவரது காருக்கு நானும் சிவகுமாரனும் குண்டு வைத்தது பற்றியும் அதன் பின்னர் சிவகுமாரன் அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்ட பின்னர் நான் வடமராட்சிக்கு தப்பி வந்து குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருடன் மயிலிட்டியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தது பற்றியும் எழுதி இருந்தேன்.

சிவகுமாரன் மீது ஏற்கனவே பொலிசாருக்கு சந்தேகக் கண் இருந்தேபோதிலும் தாடித்தங்கராசாவே அவரை காட்டிக்கொடுத்திருந்தார். சிவகுமாரனைத் தொடர்ந்து எம்முடன் செயற்பட்ட அரியரத்தினமும் கைது செய்யப்பட்டார். என்னையும் பொலிசார் தீவிரமாக தேடத்தொடங்கினர். இதற்கிடையில், சிவகுமாரனை காட்டிக்கொடுத்ததற்காக 1971 மார்ச் 27 ஆம் திகதி நடேசதாசன் குழுவைச் சேர்ந்த சின்னச்சோதி ஜெயபால் மற்றும் மோகன் ஆகியோர் சன்னதி கோவிலில் வைத்து தாடித்தங்கராசா மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். இதன்போது சிறு காயத்துடன் தாடித்தங்கராசா தப்பி ஓடிவிட்டார். அரசியல் நோக்கங்களுக்காக துப்பாக்கியை பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள் நடத்திய முதலாவது தாக்குதல் இது என்று கூறலாம். இந்த தாக்குதலுக்கான பின்தள வேலைகளை தம்பி பிரபாகரனே திட்டமிட்டு நடத்தியிருந்தார். ஆனால், அவரை இந்த தாக்குதலில் ஈடுபட ஏனையவர்கள் அனுமதிக்கவில்லை.

Kuttimani and Thangaththuraiதொடர்ந்தும் மயிலிட்டியில் குட்டிமணி, தங்கதுரையுடன் தங்கி இருந்து அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாமல், அவர்களிடம் சொல்லிவிட்டு அச்செலுவில் உள்ள எனது எனது பெரியம்மா வீட்டுக்கு புறப்பட்டேன். கையில் காசு எதுவும் இல்லாததால் நடந்தே அச்செழுவுக்கு சென்றேன். அங்கு குளித்து சாப்பிட்டுவிட்டு உடுப்பையும் மாற்றி யாழ்ப்பாணம் நகரில் உள்ள டாக்டர் தர்மலிங்கம் வீட்டுக்கு சென்றேன். அவர்தான் சமயங்களில் எனக்கு பண உதவி செய்துவந்தார். என்னை அங்கு கண்டு நடந்தவற்றை கேட்டுவிட்டு ” நல்ல வேலை செய்தியல்” என்று கூறி என்னை கட்டிப்பிடித்தார். வேண்டிய பணம் கொடுத்து உதவினார். அன்று ஏப்ரல் 3 ஆம் திகதி. நான் அங்கிருந்து பேராதனை சென்று அங்குள்ள எனது நண்பர்களுடன் தங்கினேன். அப்போது ஜேர்மன் நாட்டு தயாரிப்பான 0.22 பிஸ்டல் என்னிடம் இருந்தது. அதனையும் கூடவே கொண்டு சென்றிருந்தேன். இதனைக் கண்ட எனது நண்பர்களுக்கு என்னை வைத்திருக்க பயம். இதனால் மறுநாள் கொழும்பு செல்ல தீர்மானித்தேன்.

மறுநாள் (ஏப்ரல் 4) சேகுவாரா புரட்சியை எதிர்பார்த்து அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் கடுகண்ணாவ ரயில் சேவை இருக்கவில்லை. இதனால், கண்டியில் இருந்து குருநாகலை சென்று பின்னர் அங்கிருந்து கொழும்பு சென்றேன். அங்கு பம்பலப்பிட்டி உபதிஸ்ஸ வீதியில் உள்ள எனது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். இதேநேரம், ஏப்ரல் 5 ஆம் திகதி வெள்ளவாயவில் பொலிஸ் நிலையம் ஒன்றையும் மறுநாள் யாழ் பொலிஸ் நிலையத்தையும் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி. பி) தாக்கி இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரோந்து செல்லும் இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி வெற்றி அளிக்காமல் விபத்தில் முடிவடைந்தது. இது 7 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

JVP-suspect

1971 ஆம் ஆண்டு சேகுவாரா புரட்சியின்போது கைது செய்யப்படும் ஒரு ஜே.வி.பி வீரர்

இந்த சந்தர்ப்பத்தில் நான் கொழும்பு பம்பலப்பிட்டியவில் தங்கி இருந்தேன். ஏப்ரல் 9 ஆம் திகதி நான் அங்கு தங்கி இருந்தபோது, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை தாக்க வந்த சேகுவாரா உறுப்பினர்கள் என்று கூறி 15 முதல் 20 குண்டர்கள் சிலரை கொண்டுவந்து பொலிஸ் நிலையத்தின் உள்ளே வைத்து சுட்டுக்கொன்றதை நான் இருந்த வீட்டின் ஜன்னல் மூலம் பார்த்தேன். எவ்வாறு சரியான திட்டமிடல்கள் இன்றி ரோகன வியஜவீர தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் இலங்கை இராணுவம் மீது தாக்குதல் தொடங்கி பெரும் அழிவை சந்தித்தனர் என்பதை கொழும்பில் தங்கி இருந்த சில நாட்களில் கண்டுகொண்டேன். இது என் மனதில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது.

ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று எனது மோதிரத்தை விற்று விமானம் மூலம் இரத்மலானையில் இருந்து பலாலி மூலம் யாழ்ப்பாணம் சென்றேன். யாழ் வந்து மண்டை தீவில் உள்ள எனது ஒரு உறவினர் வீட்டில் தங்கினேன். அங்கிருந்துகொண்டு எனது நெருக்கமான நண்பர்களை ஒருவாறு சந்திக்க முடிந்தது. திருநெல்வேலியில் நடந்த ஒரு சந்திப்பில் பிரபாகரனும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, பொலிஸ் நிலையங்களை தாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், ஜே. வி.பியினரின் புரட்சியில் இருந்து பாடங்களை நாம் கற்றுக்கொண்டு நிதானமாக செயற்படவேண்டும் என்றும் இப்போது இத்தகைய தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் எடுத்துக் கூறினேன். பிரபாகரன் அதனை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் என்னைப் பற்றி தகவல் வழங்குபவர்களுக்கு 5000 ரூபா வரை சன்மானம் வழங்கப்படும் என்று பொலிசார் அறிவித்திருந்தனர். இந்த சமயத்தில் நான் மண்டை தீவில் இருந்து கல்வியங்காடு சென்று ஒரு வீட்டில் தங்கி இருந்தேன்.

மே மாதம் என்று நினைக்கிறேன், கல்வியங்காட்டில் சிவராஜா என்பவர் வீட்டில் என்ன செய்யலாம் என்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். எவ்வாறு பலம் பொருந்திய இலங்கை இராணுவத்தை எதிர்ப்பது? இதற்கு நாம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ? என்று கூடி ஆராய்ந்தோம். இந்த கூட்டம் பற்றியும் அதன் பின்னர் நாம் என்ன செய்தோம் என்பது பற்றியும் எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

பதிவு 6…..