செய்திகள்

சூதாட்ட குற்றச்சாட்டு: லலித்மோடி மீது அவதூறு வழக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய 3 வீரர்களும் ரியல் எஸ்டேட் அதிபரும், சூதாட்ட தரகருமான பாபா திவானிடம் தலா ரூ.20 கோடி பணம் மற்றும் பிளாட்டை லஞ்சம் பெற்றதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி புகார் கூறி இருந்தார்.இது தொடர்பாக அவர் 2013–ம் ஆண்டு ஐ.சி.சி.க்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கடிதம் எழுதி இருந்தார். அவர் தகவல் அனுப்பி இருந்தன. ஐ.சி.சி.யும் உறுதி செய்தது.

லலித்மோடியின் இந்த சூதாட்ட குற்றச்சாட்டை கிரிக்கெட் வாரியம் நேற்று நிராகரித்தது. மேலும் ஐ.சி.சி.யும் 3 வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி. வட்டாரங்கள் கூறும்போது, புகார் கூறப்பட்ட வீரர்களுக்கு எதிராக ஆதாரம் இருந்திருந்தால் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக அந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும்.

2 ஆண்டுகளாக அத்தகையை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வீரர்களும் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டியில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது என்று தெரிவித்தன.இதற்கிடையே தங்களது நேர்மை குறித்து கேள்வி எழுப்பிய லலித்மோடி மீது 3 வீரர்களும் அவதூறு வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.