செய்திகள்

அக்கரைப் பச்சை – நாவல் – பாகம்-3

நாவல் – பாகம்-3

வாழ்க்கை என்ற மொத்தமான திருப்பங்கள் நிறைந்த கதைப்புகத்கத்தில் இன்னும் எத்தனையோ அத்தியாயங்களை ஆனந்தன் சந்திக்க வேண்டியிருக்கு. அது ஆனந்தனுக்கும் புரியும். அவனும் ஒரு எழுத்தாளன் அல்லவா?
நிவேதாவுக்கு பல் துலக்கி முகம் கழுவி முகத்தைத் துடைத்து சாப்பாட்டு மேசையருகே கூட்டி வந்தான் ஆனந்தன்.
கதிரையில் ஏறி அமர்ந்த நிவேதா புன்னகையுடன் சுவரில் தொங்கும் நதியாவின் படத்தைக் கண்வெட்டாமல் பார்த்தவண்ணம் இருந்தாள்.
சமையலறைக்குள் சென்ற ஆனந்தன் இரண்டு துண்டுப் பாணில் பட்டர் பூசி, முட்டையும் பொரித்து பிளேட்டில் எடுத்துக் கொண்டு மேசைக்கு வந்தான்.

naaval-2

நிவேதா தாயின் படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு பிளேட்டை மேசையில் வைத்து விட்டு நிவேதாவின் அருகே சென்று அவளது தலையை வருடிக் கொடுத்தான் ஆனந்தன்.
நிவேதாவின் கண்கள் கலங்கி விட்டன. தாயின் படத்திற்கு நேராக வலது கையை நீட்டி “அப்பா…. அம்மா” என்று விக்கினாள்.
ஒரு குழந்தை தகப்பன் இல்லாமல் வாழலாம். ஆனால் தாய் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது ஆனந்தனுக்கு நன்றாகப் புரியும்.
சின்ன வயசிலேயே தாயை புற்று நோய் பறித்துக் கொண்டது. தாயில்லாமல் அவன் பட்ட கஷ்டங்கள் அவனுக்கு நன்றாகவே தெரியும். எத்தனை நாட்கள் தாய்ப் பாசத்திற்காக ஏங்கியிருக்கின்றான். அவனது நண்பர்கள் தாய் தந்தையரோடு கோவிலுக்குப் போகும் போதெல்லாம் தாய்க்காக அவன் அவர்களைப் பார்த்து எனக்கு தாயில்லையே என்று ஏங்கியதுண்டு.

naaval-1

ஆனந்தனின் தந்தை சிவநேசன் ஒரு தந்தையாக, தாயாக இருந்து ஆனந்தனுக்குப் பணிவிடை செய்ய முற்சித்திருக்கிறார். ஆனால் ஒரு தாயால் முழுமையாக பிள்ளைக்குச் செய்யும் பணிவிடைகளை அவரால் செய்ய முடியவில்லை. அத்துடன் அவர் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால் முழுக்கவனத்தையும் ஆனந்தன் மேல் செலுத்த முடியவில்லை.
ஆனந்தன் தான் தாயில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை எவருக்கும் வரக்கூடாது என்று நினைத்ததுண்டு. ஆனால் இன்று அவன் மகள் நிவேதாவிற்கும் அதே நிலை என்று நினைத்த போது ஆனந்தனின் கண்களும் நிவேதாவிற்காக கலங்கி விட்டன.
மீண்டும் நிவேதாவின் தலையை வருடிவிட்டு முகத்தில் முத்தமிட்டான் ஆனந்தன்.
சின்னக்கைகளால் கண்களைத் துடைத்த வண்ணம் அப்பா… என்று இழுத்தாள் நிவேதா.
“சொல்லம்மா….” என்றான் ஆனந்தன்.

“அப்பா… சாப்பிட முதல் அப்புசாமி கும்பிட்டுப்போட்டு சாப்பிடவேணும் என்று சொன்னவா”
நினைவுபடுத்தினாள் நிவேதா. ஆனந்தன் சிரித்துக்கொண்டே “சொரி (Sorry) அம்மா. நான் தான் மறந்து போனன்” என்று சொல்லி சாமியறைக்கு நிவேதாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
இருவரும் கடவுளை வணங்கினார்கள். நிவேதா தனக்கு அம்மா சொல்லிக்கொடுத்த தேவாரங்களில் இரண்டைப் பாடினாள். பின் கடவுளின் படத்தை தொட்டுக் கும்பிட்டு விட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தாயின் படத்தையும் இரு கரம் கூப்பி வணங்கினாள்.
திரும்பி ஆனந்தனைப் பார்த்தாள். ஆனந்தனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தாடையை நனைத்தது.
“அப்பா… அம்மா சாமிட்ட போனதை நினைச்சா அழுகிறீங்க. சாமி அம்மாவ கவனமாக பார்த்துக்கொள்வார் அப்பா” ஆனந்தனுக்கு ஆறுதல்  சொன்னாள் நிவேதா.

naaval-3நிவேதாவின் முகத்தில் நதியாவின் சாயல் அப்படியே அச்சுப்போல் இருந்தது. இருக்காதா என்ன… நதியாவின் மகள்தானே. அவள் பேச்சும் நதியா பேசுவதைப் போன்றே இருந்தது.
அந்த நாட்களில் ஆனந்தன் கோபப்பட்டாலோ அல்லது குழம்பிப் போயிருந்தாலோ மௌனமாக இருந்துவிட்டு ஆனந்தனுக்கு ஒரு தோழியாக நின்று ஆறுதல் சொல்வதும் நதியதான்.
அதே நதியாதான் இப்பவும் அடிக்கடி ஆனந்தனின் மனக்கண்முன் வந்து சிரித்துப் பேசிப் போகிறாள்.
“அப்பா சாப்பிடப்போவமா” நிவேதா கேட்க அவளுடன் சாமியறையை விட்டு வெளியே வந்தான் ஆனந்தன்.
ஒடிச் சென்று சாப்பாட்டு மேசையருகே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள் நிவேதா.
ஆனந்தன் சாப்பாட்டுப் பிளேட்டை எடுத்து நிவேதாவின் முன் வைத்து விட்டு “சாப்பிடம்மா” என்று சொல்ல.
ஒன்றும் சொல்லாமல் ஆனந்தனைப் பார்த்தாள் நிவேதா.
நான் உங்களுக்கு “ஊட்டி விடட்டா அப்பா” நிவேதா கேட்டாள்
ஆனந்தன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“நீ சாப்பிடம்மா – எனக்கு இப்ப பசிக்கேல்ல. பிறகு சாப்பிடுறன்” ஆனந்தன் சொல்ல
“ஒரு வாய் அப்பா” என்று சொல்லிக் கொண்டு பாணில் ஒரு துண்டைப் பிய்த்து எடுத்து தந்தையின் வாய்க்குள் எட்டி வைத்தாள் நிவேதா.
தாங்ஸ் அம்மா. இனி நீ சாப்பிடு என்று சொல்லி விட்டு நதியா செய்யும் அத்தனை செயல்களையும் இவளும்செய்கிறாளே என்று நினைத்த வண்ணம் நிவேதாவையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்தன்…..

last-episode