”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறு” – என்கிறார் சரத் வீரசேகர
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்திருக்க நடவடிக்கையெடுத்திருக்க வேண்டுமெனவும் அதனை செய்யாது தவறிழைக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாகும். இந்த கட்சித் தொடர்பாக அன்று ஜனாதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் கருணை இன்று பூகம்பமாக மாறிவிட்டது.
எவ்வாறாயினும் உலக நாடுகளில் பயங்கரவாத இயக்கங்கள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்களின் அரசியல் கட்சிகளும் இல்லாமல் செய்யப்பட்டன. இதன்படி ஜெர்மனியில் ஹிட்லரை அழித்தவுடன் அவரின் நாசி கட்சியையும், கம்போடியாவில் போல்போட் கொன்றவுடன் அவரின் கேமரூன் என்ற அரசியல் கட்சியும், ஈராக்கில் சதாம் ஹுசைன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் பாத் என்ற அரசியல் கட்சியும் தடை செய்யப்பட்டது.
ஆனபோதும், இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாது தவறிழைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் அவர்கள் புலிகளை நினைவு கூர்ந்து செயற்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். -(3)