செய்திகள்

மாற்றுத் தலைமை ஒன்றிற்கான சந்தர்ப்பம் தவறவிடப்படுமா?

யதீந்திரா

மாற்றுத் தலைமை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணமுடியவில்லை. அது தொடர்பான உரையாடல்களும் பெருமளவிற்கு கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக சுருங்கிக்கொண்டு செல்கிறது. இது தொடர்பில் அதிகம் எழுதப்பட்டுவிட்டது. அதிகம் விவாதிக்கப்பட்;டுவிட்டது. ஆயினும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியதான செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே, கஜேந்திரகுமார் இந்தத் தகவலை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை விக்கினேஸ்வரனும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால் விக்கினேஸ்வரன் இவ்வாறானதொரு கடிதத்தை கஜேந்திரகுமாருக்கு அனுப்பியமை தொடர்பில் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனை சுரேஸ் இந்தப் பத்தியாளரிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் ஒரு கூட்டாக போட்டியிடுவதற்கு தான் தயார் என்றும் ஆனால், அந்தக் கூட்டில் சுரேஸ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் இருக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கஜேந்திரகுமார் குறித்த நேர்காணலில் தெரிவித்திருக்கின்றார். இந்த நிபந்தனையை தான் நிராகரித்துவிட்டதாகவும் ஆனால் விக்கினேஸ்வரன் தனித்து வருவாராக இருந்தால் அவருடன் கூட்டுச் சேர்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையென்றும் குமார் குறிப்பிட்டிருக்கிறார். கஜேந்திரகுமாரின் கருத்துக்கள் ஆச்சரியமான ஒன்றல்ல ஆனால் விக்னேஸ்வரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதில் கொஞ்சம் ஆச்சரியம் தென்படலாம் ஆனால் இதன் மூலம் ஒரு கூட்டாக இணைந்து பயணிப்பதற்காக விக்கினேஸ்வரன் போதிய விட்டுக்கொடுப்புக்களை செய்திருக்கிறார் என்னும் செய்தியும் வெளிவந்திருக்கிறது. இதற்கு மேல் விக்கினேஸ்வரனால் என்னதான் செய்ய முடியும் என்னும் கேள்வியும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இந்தப் பத்தியாளர் இதற்கு முன்னரும் பல தடைவைகள் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மாற்றுத் தலைமையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கு ஆகக் கூடிய விட்டுக்கொடு;ப்புக்கள் தேவை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்னும் வகையிலான புரிதலுடன் ஒரு ஜக்கிய முன்னணியை உருவாக்க முடியாது. கடந்தகாலத்திற்குள் அதிகம் கட்டுண்டு கிடக்க விரும்புவர்களால் ஒரு ஜக்கிய முன்னணியை நினைக்கவே முடியாது. ஜக்கிய முன்னணி தொடர்பான உபாயம் தொடர்ந்தும் இழுபறி நிலைக்குள் கிடப்பதற்கு இதுதான் காரணம். ஆரம்பத்தில் சைக்கிள் சின்னத்தை நிராகரித்திருந்த விக்கினேஸ்வரன் அததில் போட்டியிடுவதை பரிசீலித்திருப்பதான ஜக்கிய முன்னணி ஒன்றிக்கான அதி கூடிய விட்டுக்கொடுப்புத்தான். ஏனெனில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது பாட்டன் வழி கட்சியை விட்டுக்கொடுப்பதற்கு தயாரற்ற சூழலில்தான், விக்கினேஸ்வரன் இறதியாக அதனையும் ஏற்றுக்கொள்ள தயார் என்று அறிவித்திருக்கிறார். ஆனாலும் கஜேந்திரகுமார் அதனையும் நிராகரித்திருக்கின்றார். குமார் குறித்த நேர்காணலில் கழிவுகளுடன் தாங்கள் சேரமுடியாது என்று குறிப்பிட்டிருக்கின்றார். மற்றவர்களை கழிவு என்று குறிப்பிடும் உரிமையும் அதிகாரமும் கஜேந்திரகுமாருக்கு எங்கிருந்து வந்தது? அவ்வாறு கூற முடியுமா? எனவே கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரையில் ஒரு ஜக்கிய முன்னணி என்பது தனது சொந்த விருப்பின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். அதற்குள் வரவிரும்பும் எவரும் தனது கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனைத்தான் கடந்த பத்துவருடங்களாக இலங்கை தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முன்னெடுத்து வருகிறது. அவ்வாறாயின் தமிழசு கட்சியின் மேலாதிக்கத்தின் கீழ் இயங்கும் கூட்டமைப்பிற்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கப்போகும் கூட்டு முன்னணிக்கும் இடையில் என்ன வேறுபாடுண்டு?

Elukathamil batticaloa 6

கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது, உதய சூரியன் சின்னத்தின் கீழ் ஒரு ஜக்கிய முன்னணியை உருவாக்குவது தொடர்பில் பலரும் கூறினர். மூத்த அரசறிவியல் சிந்தனையாளர் திருநாவுக்கரசும் அவ்வாறானதொரு கருத்தையே வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் பலரும் கஜேந்திரகுமாருடன் பேசியிருந்தனர். ஆனாலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கு உடன்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்தசங்கரியை காரணம் காட்டி, அந்த முயற்சியை பலவீனப்படுத்தினார். பின்னர் சுரேஸ்பிரேமச்சந்திரன் மட்டும் தனித்து அந்த முயற்சியில் இறங்கியதன் விளைவாக அந்த முயற்சி, கூட்டமைப்பிற்கு ஒரு சவாலாக அமையவில்லை. உண்மையில் ஆரம்பத்தில் உதய சூரியன் சின்னத்தின் கீழ் ஒரு பலமான கூட்டு உருவாவது தொடர்பில் தமிழரசு கட்சி கலக்கமடைந்திருந்தது. எனினும் கஜேந்திரகுமார் அந்த முயற்சிக்கு எதிராக நின்றதால் கூட்டமைப்பின் முன்னாலிருந்து ஒரு பிரதான சவால் இல்லாமல் போனது. கஜேந்திரகுமாரால் கூட்டமைப்பு நன்மையடைந்தது. அதாவது சம்பந்தனும் சுமந்திரனும் நன்மையடைந்தனர்.

விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு புதிய கட்சி உருவாகியமை தொடர்பில் ஆரம்பத்தில் தமிழரசு கட்சி பெரிதும் அஞ்சியது. அவரது தலைமையில் கஜேந்திரகுமார், சுரேஸ் மேலும்; பலரும் ஒன்றிணைந்தால் அது நிச்சயம் தமிழரசு கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்றே அஞ்சினர். ஆனால் சுரேஸ்பிரேமச்சந்திரனோடு எந்தவொரு கூட்டும் இல்லை என்று கஜேந்திரகுமார் அறிவித்ததை தொடர்ந்து கூட்டமைப்பு மீண்டும் உற்சாகமடைந்தது. விக்கினேஸ்வரன் தலைமையின் கீழ் ஒரு வலுவான தலைமையை தேடியவர்கள் ஏமாற்றமடைந்தனர். மீண்டும் கஜேந்திரகுமாரால் கூட்டமைப்பு நன்மையடைந்தது. அதாவது சம்பந்தனும் சுமந்திரனும் நன்மையடைந்தனர். கஜேந்திரகுமார் மக்கள் முன்னாலும், அவரது ஆதரவாளர்கள் முன்னாலும் எவரை தவறென்று கூறிவருகின்றாரோ, எவரை தோற்கடிக்க வேண்டுமென்று கூறிவருகின்றாரோ மறுதலையாக அவர்களையே பலப்படுத்தி வருகின்றார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மாற்றுத் தலைமை ஒன்றிற்கான முயற்சிகள் தொடர்ந்தும் தோல்வியிலேயே முடிகிறது. உள்ளுராட்சித் தேர்தலின் போது ஆனந்தசங்கரியை காரணம் காண்பித்து, சுரேஸ்பிரேமச்சந்திரனை தோற்கடித்தார். இன்று சுரேஸ்பிரேமச்சந்திரனை காரணம் காண்பித்து, விக்கினேஸ்வரனை தோற்கடிக்க முயற்சிக்கின்றார். அண்மையில் முஸ்லிம் தலைமைகள் பழைய விடயங்களை விட்டுவிட்டு, தமிழ் மக்களுடன் iகோர்க்க வேண்டும் என்றவாறு குமார் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம்களை பழைய விடயங்களை கைவிடுமாறு கூறும் அவரோ ஏனைய கட்சிகளின் பழைய விடயங்களை பேசுவதையே ஒரு அரசியல் அணுகுமுறையாக கைக்கொண்டிருக்கிறார். ஒட்டு மொத்தமாக விடயங்களை தொகுத்து நோக்கினால், தாயக அரசியல் பரப்பில், கூட்டமைப்பை தோற்படிப்பதற்கான ஒரு வலுவான ஜக்கிய முன்னணி உருவாகிவிடக் கூடாது என்பதில் கஜேந்திரகுமார் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றாரா என்னும் கேள்வியே எழுகிறது. கஜேந்திரகுமாரை பொறுத்தவரையில் மாற்று என்றால் அது தனது பாட்டன்வழி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மட்டுமே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மாற்று என்று எதுவும் இருக்கக் கூடாது. இதுவரை நடைபெற்ற, – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விடயங்களை தொகுத்து நோக்கும் போது, இவ்வாறானதொரு முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. கஜேந்திரகுமார் இதில் உறுதியாக இருக்கும் வரையில் தமிழரசு கட்சிக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படப் போவதில்லை. ஆனால் கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு ஜக்கிய முன்னணியை உருவாக்க வேண்டுமென்று சிந்திப்பவர்கள் தொடர்ந்தும் தோல்வியையே சந்திக்க நேரிடும்.