செய்திகள்

”தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள வாக்குறுதி பொய்யானது” : சபையில் திகாம்பரம் தெரிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதாக பிரதமர் கூறியுள்ளமை பொய்யாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதாக பிரதமர் கூறியுள்ளார். எமது ஆட்சியிலும் ஒரு சில அமைச்சர்கள் இவ்வாறே பொய்களை கூறினார். அதேபோல் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் கூறியுள்ளதே தவிர இந்த கோரிக்கையை கம்பனிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
அதேபோல் இவ்வாறு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படும், அடிப்படை சம்பளம் ஆயிரமா அல்லது ஏனைய கொடுப்பனவுகள் எல்லாமே சேர்த்து இந்த தொகை வழங்கப்படுகின்றதா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளத்தையே எதிர்பார்க்கின்றனர். இதனால் கடந்த அரசாங்கத்தில் ஏமாற்றப்பட்டதை போன்று இந்தத் தடவையும் மக்களை ஏமாற்றவே முயற்சிக்கப்படுகின்றது. 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்குவது என்றால் அதனை வரவேற்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.