தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் புரேவி புயல் காரணமாக 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் புரேவி புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.பருத்தித்துறையையும் சாவகச்சேரியினையும் இணைக்கும் பிரதான வீதியில் குறிப்பாக சரசாலை குருவிக்காட்டு பிரதேசத்திற்கு அண்மித்த பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை கைதடி வடக்கு, மட்டுவில் சந்திரபுரம் மோகனதாஸ் வீதியில் தேங்கியுள்ள வெள்ளம் பிரதேச செயலரின் அறிவுறுத்தலுகமைய கனரக இயந்திரமூடாக இன்று வெட்டி அகற்றப்படுகிறது.யாழ். தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால் மட்டுவில், கைதடி, நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இப் பிரதேச செயலக பிரிவில் சுமார் 2,139 பேர் தங்களின் இருப்பிடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்த்துள்ளார்கள். இவர்களுள் 54 குடும்பங்களை சேர்ந்த 198 பேர் 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.கடுங்காற்றுக் காரணமாக, தென்மராட்சி மீசாலை வடக்கு பகுதியில், 300 ஆண்டு பழமையான பாலை மரம் அடியோடு கோவில் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது. அத்துடன், மின்சாரக் கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்தமையால் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.(15)