செய்திகள்

திருநெல்வேலியில் நடந்த ‘சின்னச் சின்னக் கைகள் சித்திரக் கண்காட்சி’ (புகைப்படத் தொகுப்பு இணைப்பு)

யாழ்.ஆடியபாதம் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள தனு ஆட் சித்திரக் கூடத்தின் ஏற்பாட்டில் ‘சின்னச் சின்னக் கைகள் சித்திரக் கண்காட்சி’ திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் அண்மையில் அங்கு பயிலும் சித்திரக் கூட மாணவன் செல்வன்.ரகுமார் பரிசித் தலைமையில் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடர்ச்சியாக இரு நாட்கள் நடைபெற்றது.

இந் நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண மேலதிகக் கல்விப்பணிப்பாளர் திருமதி.பிறேமாவதி செல்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த கண்காட்சியைச் சம்பிராதய பூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருந்தினர்களும்,மாணவர்களும்,பெற்றோர்களும்,கலை ஆர்வலர்களும் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டனர்.ஓவியர் கலாபூசணம் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம்(ரமணி) மற்றும் யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் அரியபுத்திரன் லிங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காட்சியில் ஆரம்பப் பிரிவிலிருந்து உயர்தரம் வரையான சித்திரக் கூட மாணவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.சின்னக் கைகளின் கைவண்ணத்தில் உருவான குறித்த ஓவியங்கள் பல்வேறு உணர்வுகளைச் சித்தரிக்கும் வகையிலும்,காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமைந்திருந்தன.குறித்த கண்காட்சியை நூற்றுக்கணக்கான மாணவர்களும்,கலை ஆர்வலர்களும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய திருமதி.பிறேமாவதி செல்வின்,தனு ஆட் நிறுவனத்தின் பொறுப்பாசிரியர் சிவதாசன் தன்னிடம் காணப்படுகின்ற கலைத் திறமையைத் தனக்குள் மாத்திரம் முடக்கி விடாது அடுத்து வரும் இளைய தலைமுறைக்கும் ஓவியக்கலையைப் பயிற்றுவிக்கும் பாங்கு பாராட்டுதற்குரியது. ஆசிரியர்களுடைய பின்னூட்டலும்,பெற்றோர்களின் ஊக்குவிப்பும் மாணவர்களின் திறமைகளுக்கு என்றும் நல்வழிகாட்டியாக அமையும் என்றார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் அரியபுத்திரன் லிங்கராஜ்,சின்னச் சின்னக் கைகளால் தான் இவ்வாறான படைப்புக்களை உருவாக்க முடியும் என்பதை இந்தச் சித்திரக் கண்காட்சி தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது.மாணவர்களுடைய மன உணர்வுகளும்,அவர்களுடைய உள்ளக் கிடக்கைகளும் இந்தச் சித்திரக் கண்காட்சியூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மாணவர்களுடைய அகத்திலே தோற்றம் பெறுகின்ற விடயங்களைத் தங்கள் கைவண்ணங்களால் வெளிப்படுத்துவதற்கு உரிய களம் இங்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் ஒருபுறமிருக்க அவர்களின் திறமைகளுக்கான அறுவடைக்குரிய நாளாகவும் இந்த நாளைக் கருத முடியும் என்றார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஓவியர் ரமணி, மாணவர்களின் ஓவியக் கலை வெளிப்பாடுகளை விதந்து பாராட்டியதுடன் மாணவர்களுக்கு நல் அறிவுரைகளும் கூறினார்.
மாணவர்களின் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையிலும்,ஓவியக் கலையை வளர்க்கும் நோக்கிலும் குறித்த சித்திரக் கண்காட்சி ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டதாக மேற்படி நிறுவனத்தின் பொறுப்பாசிரியரும் ஓவியருமான மா.சி.சிவதாசன் தெரிவித்தார்.தாம் இவ்வாறானதோர் கண்காட்சியை கடந்த 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர்-1 ஆம் திகதி சிறுவர் தினமன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள தமது நிறுவனத்திலும்,கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட்-18 ஆம் திகதி கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்து நடாத்தியதாகத் தெரிவித்த அவர் மூன்றாவது தடவையாக இந்தக் கண்காட்சியை ஒழுங்கமைத்து நடாத்துவதாகவும் மேலும் தெரிவித்தார்.

தற்காலத்தில் பொதுமக்கள் அதிக வேலைப் பளுவின் மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் சித்திரக் கண்காட்சி போன்ற கலை வெளிப்பாடுகள் மன அழுத்தம் மற்றும் புண்பட்ட நெஞ்சங்களுக்கு ஆத்ம திருப்தியளிக்கும் விடயம்.அதுவும் பாடசாலைக்கு வெளியில் இவ்வாறான சித்திரக் கண்காட்சி ஏற்பாடு செய்து நடாத்தப்படுவது வரவேற்புக்குரியதும் பாராட்டுக்குரியதும் ஆகும்.

செய்திக் கட்டுரையாக்கம் மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்.