• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

தமிழ்த் தேசிய தலைமைகளால் மாற்றங்களை விளங்கிக் கொள்ள முடிகின்றதா?

யதீந்திரா

தேர்தல் காலத்தில் ஒருவரை ஓருவர் குற்றம்சாட்டுவதில் தங்களது ஆற்றலை விரயம் செய்துகொண்டிருந்த தமிழ்;த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இப்போது அமைதியாக இருக்கின்றனர். அவர்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்பதுதான் உண்மையானது. தாங்கள் நினைக்கும் எதனையும் செய்வோமென்னும் இறுமாப்பில் இருக்கின்ற பலம்மிக்க ராஐபக்சேக்களின் அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசிய தலைமைகள் என்போரிடம் எந்தவிதமான உபாயங்களும் இல்லை.

கூட்டமைப்பின் மீது இதுவரையில் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவோ, அதே விமர்சனங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்கினேஸ்வரனும் எதிர்கொள்வதற்கான சூழலே தெரிகின்றது. விக்கினேஸ்வரனின் உரைகள் தொடர்பில் தென்னிலங்கையின் கடும்போக்குவாதிகள் அவ்வப்போது எச்சரிக்கும் தொனியில் பேசி வருகின்றனர். இது எதிர்பார்த்த ஒன்றுதான். விக்கினேஸ்வரனின் பேச்சும் ஆச்சரியமானதல்ல அதற்கு எதிரான தென்பகுதியின் கூச்சல்களும் ஆச்சரியமானதல்ல. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் வேறு. விக்கினேஸ்வரனின் உரை தொடர்பில் மகிந்த ராஐபக்சவோ அல்லது கோட்டபாய ராஐபக்சவோ பேசவில்லை. மாறாக, இவ்வாறான விடயங்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கென்றே அவர்களால் போசித்து வளர்க்கப்படும் விமல்வீரவன்ச, உதயகம்மன்பில இப்போது புதிதாக வந்திருக்கும் அட்மிரல் சரத்வீரசேகர ஆகியோரே பதிலளிக்கின்றனர். அதே போன்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சிங்கள இனவாத பௌத்த தரப்பினரின் ஆதரவு தேவையென்று கருதும் சஐpத்பிரேமதாச அணியினரும், விக்கினேஸ்வரனுக்கு எதிராகவே பேசுகின்றனர். இறுதியில் விக்கினேஸ்வரனது ஆற்றலும் ஆளுமையும் இவ்வாறானவர்களுடன் மல்லுக்கட்டுவதிலேயே வீணாகப் போகின்றது. விக்கினேஸ்வரன் நாடாளுமன்றத்தில் பேசும்போதெல்லாம் இவ்வாறான கூச்சல்கள் தொடரத்தான் போகின்றது. இவ்வாறானவர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேலையை மட்டுமே விக்கினேஸ்வரன் செய்து கொண்டிருக்கப் போகின்றாரா?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சில தெளிவான செய்திகளை அனைவருக்குமே சொல்லியிருக்கின்றது. ஆனால் தமிழ் தலைவர்கள் என்போர் எதையாவது கற்றுக் கொண்டிருக்கின்றனரா? – ஆகக் குறைந்தது கற்றுக்கொள்வதற்கான முனைப்பைக் கூட காணமுடியவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் கூட்டமைப்பு பின்னடைவுகளை சந்தித்திருப்பது எந்தளவு தூரம் உண்மையோ அதேயளவு உண்மை மாற்றுத் தரப்பினர் என்போரும் மெச்சத்தக்கவகையில் வெற்றியை காண்பிக்கவில்லை. விக்கினேஸ்வரன் அணியில் அரசியலில் நீண்டகால அடையாளமுள்ளவர்கள் இருந்தும் ஒரு ஆசனத்தையே பெறமுடிந்திருக்கின்றது. இதிலிருந்து குறித்த நபர்கள் அனைவரும் அதிகம் கற்றுகொள்ள வேண்டியிருக்கின்றது. கஜேந்திரகுமார் தரப்பினர் இரண்டு ஆசனங்களை பெற்றிருப்பதால், அதில் அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளலாம் ஆனால் அதுவும் மெச்சத்தக்க வெற்றியல்ல. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு வெளியில் மாற்றுத் தரப்பினர் என்போரால் எவ்வித செல்வாக்கையும் காண்பிக்க முடியவில்லை. அந்த வகையில் மாற்றுத் தலைமையென்பதும் மக்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை. இந்த ஒவ்வொரு விடயங்களிலிருந்தும் குறித்த தரப்பினர் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. வெறுமனே கூட்டமைப்பை மட்டும் குற்றம்சாட்டிக் கொண்டு அரசியல் செய்வதற்கான வாய்ப்புக்கள் இனியிருக்கப் போவதில்லை. தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை மாற்றுத் தரப்பினர் எவ்வாறு நிரூபிக்கப் போகின்றனர்?

கூட்டமைப்பை பொறுத்தவரையில் அதன் கடந்த காலத் தவறுகளினால் அது பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றது. கூட்டமைப்பின் மீது முழுமையாக நம்பிக்கைவைத்திருந்த மக்கள் சிதறியிருக்கின்றனர். அதே வேளை கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த மாற்றுத் தரப்பினர் மத்தியிலும் பிளவுகள் இருந்த காரணத்தினால், மக்களுக்கு முன்னால் பல தெரிவுகள் இருந்தன. ஏனெனில் அனைத்து தரப்பினருமே கூட்டமைப்பின் மீது மட்டுமே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுக்களுடன்தான் அனைவருமே மக்களிடம் சென்றனர். இந்த விடயத்தில் கொள்கைசாந்த வேறுபாடுகள் இருந்தாலும் கூட, மக்கள் கொள்கைசாந்த முரண்பாடுகளுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கொள்கையை விடவும் ஒருவர் மீது அல்லது ஒரு கட்சியின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்தான் மக்களை அதிகம் கவர்ந்திழுக்கின்றது.

Tamil Leaders

இந்த பின்புலத்தில் நோக்கினால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் கூட்டமைப்பை எதிர்த்தவர்களும், அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கும் கொள்கையுடையவர்களும் ஒரு புள்ளியில் சந்தித்தனர். அதாவது, கூட்டமைப்பு தவறான பாதையில் செல்கின்றது அதனை தோற்கடிக்க வேண்டும். இதன் காரணமாக கூட்டமைப்பின் மீதான மக்களின் அதிருப்தியும் ஓரிடத்தில் திரளாமல், பல இடங்களுக்கும் சிதறிப்போனது. இதனை இன்னும் ஆழமாக நோக்கினால், கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று செயல்பட்ட அனைவருக்குமே வெற்றி கிடைத்திருக்கின்றது. ஆனால் தமிழ்த் தேசிய அரசியலின் இலக்கு வெறுமனே கூட்டமைப்பை பலவீனப்படுத்துடன் மட்டுப்பட்டதல்ல. மக்களை ஓரணியாக்குவதற்கு பயன்படும் ஒரு அமைப்பை அல்லது ஒரு கருத்தியலை பலவீனப்படுத்தும் போது, அதற்கு மாற்றான ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால் எந்த நோக்கத்திற்காக ஒன்றை பலவீனப்படுத்த முற்படுகின்றோமா அது நாம் பாதுகாக்க நினைக்கும் தமிழ்த் தேசிய அரசியலை மேலும் பலவீனப்படுத்தவே வழிசமைக்கும்.

கூட்டமைப்பு கிழக்கில் பின்னடைவுகளை சந்தித்தமையானது, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றது. அம்பாறையில் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கியிருக்கின்றது. மட்டக்களப்பிலும் தமிழ்த் தேசிய வாக்கு வங்கியை பெருமளவில் பலவீனப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமை அடுத்து வரவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மேலும் அதிகரிக்கலாம். ஆனால் இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் எந்தவொரு தமிழ்த் தலைவரும் இதுவரை சிந்தித்ததாகத் தெரியவில்லை. கோவணத்தோடு இருந்து கொண்டு, பட்வேட்டிக் கனவுகளோடுதான் இப்போதும் தமிழ் தலைவர்கள் இருக்கின்றனர்.

சிங்கள தேசியவாதம் படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கின்ற போது, ஆகக் குறைந்தது ஒரு கல்லைக் கூடத் தூக்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியம் இருக்கின்றது. அந்தளவிற்கு தமிழ்த் தேசிய அரசியல் உள்ளுக்குள் பலவீனமடைந்திருக்கின்றது. உள்ளுக்குள் பலவீனங்களை வைத்திருக்கும் எந்தவொரு அரசியல் போக்கும் வெளித் தரப்புக்களை எதிர்கொள்ளும் ஆற்றலை பெற முடியாது. வெளித் தரப்புக்களை எதிர்கொள்ளுவதற்கு உள்ளுக்குள் பலமாக இருப்பது அவசியம். தமிழ்ச் சூழலை பொறுத்தவரையில் ஒரு பிரச்சினை வந்ததும்தான் அதற்கு விளக்கமளிப்பவர்கள் வெளியில் வருகின்றனர். உண்மையில் பிரச்சினைகளை முன் கூட்டியே ஆராய்ந்து, முன்நோக்கி பயணிப்பதற்கான உந்துசக்தியை தரவல்வல்லவர்களே இப்போது தமிழ் சமூகத்திற்கு தேவை. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்து வரவுள்ள மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசிய தரப்புக்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையை வழங்கியிருக்கின்றது.

வடக்கு மாகாண சபையை பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய எதிர்நிலை சக்திகள் தங்களை அணிதிரட்டிக் கொள்வதற்கான உத்வேகத்தை பெற்றிருக்கின்றன. அவர்களை ஒரு அணியாக நிறுத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கமே வழங்கக் கூடும். அப்போதும் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுகளுடன்தான் அவர்கள் மக்களிடம் செல்வார்கள். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியத் தரப்புக்கள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றன? தனித்தா அல்லது சேர்ந்தா? தனித்து நின்றால் அது, அரச தரப்பிற்கே அதிக வாய்ப்பை வழங்கும். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத் தரப்புக்கள் தனித்து நின்றால் அது ஏனைய தரப்பினருக்கே வாய்ப்பை வழங்கும். தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஓரணியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டால் முஸ்லிம்களின் ஆதரவுடன் கிழக்கின் ஆட்சியை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இங்கும் நான் மேலே குறிப்பிட்டவாறான உள்ளுக்குள் பலமாக இல்லாவிட்டால் இந்த நிலைமையையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாது.

தமிழ்த் தேசிய தரப்புக்கள் தங்களை ஒரு சக்தியாக திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஆராய வேண்டும். மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயமென்னும் வகையில் இது தொடர்பில் சிந்திக்கலாம். இதற்காக எவரும் தங்களின் கொள்கையை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. ஆகக் குறைந்தது இந்த ஜந்து வருடங்களுக்கான ஒரு இடைக்கால ஏற்பாடாகக் கூட இந்த ஜக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். தென்னிலங்கையில் மிகவும் பலமானதொரு அரசாங்கம் இருக்கின்ற நிலையில், அதனை எதிர்கொள்ளும் ஒரு உபாயமாக இதனை கைக்கொள்ளலாம். ஜந்து வருடங்களின் பின்னர் இந்தக் கூட்டை முன்னெடுப்பதா அல்லது இல்லையா என்பதை கட்சிகளின் தலைமைகள் முடிவுசெய்யலாம்.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் குறிப்பிட்ட சூழலை எதிhகொள்ளுதல் என்னும் அடிப்படையில் கூட்டுக்கள் உருவாகிய வரலாறுண்டு. இந்தியாவை எதிர்கொள்ளுதல் என்னும் அடிப்படையில்தான் அன்று நான்கு இயக்கங்கள் இணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கி, அதன் கீழ் திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டன. அது ஒரு இடைக்கால கூட்டு முன்னணிதான். அதே போன்றுதான் புதிய அரசியல் சவால்களை எதிர்கொள்ளுவதற்கு தனித்து நிற்பது சரியான வழயமுறையல்ல என்பதை உணர்ந்தபோதுதான், தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் செல்வநாகயம், தனது கட்சியை புறம்தள்ளி தமிழர் ஜக்கிய கூட்டணியை உருவாக்கினார். தன்னுடன் முரண்பட்டுநின்ற ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வீடு தேடிச் சென்றார். ஏனெனில் அன்றைய சவால்களை எதிர்கொள்ளுவதற்கான ஒரு உபாயமாகவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதே போன்றுதான் நோர்வேயின் மத்தியஸ்த்தின் கீழ் சர்வதேச அரங்கை எதிகொள்வதற்கு முன்னதாக, ஒரு ஜக்கிய முன்னணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுசெய்தது. அதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஜக்கிய முன்னணிகள், அரசியல் ரீதியான கூட்டுக்கள் அனைத்துமே குறித்த சூழலை எதிர்கொள்ளுதல் என்னுமடிப்படையில்தான் உருவாகியிருக்கின்றன. அப்படித்தான் அவைகள் உருவாகவும் முடியும். எங்களுக்கு முன்னால் ஒரு சவால் இருக்கின்ற போது, அதனை எவ்வாறு எதிர்கொள்வதென்பதுதான் முக்கியமே தவிர, நமக்கிடையிலான முரண்பாடுகள் முக்கியமானதல்ல. ஏனெனில் நமக்கிடையிலான முரண்பாடுகள் என்பவை உறவுநிலை முரண்பாடுகளேயன்றி பகைமுரண்பாடுகள் அல்ல. இதனை ஆழமாக புரிந்துகொண்டால் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒரு ஜக்கிய முன்னணியை உருவாக்கிக் கொள்வது மிகவும் இலகுவான விடயம்.