செய்திகள்

செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு – ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்ற – செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு – ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதி முதல் நிச்சயம் ஆயிரம் ரூபா கிடைக்கும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

(14.02.2020) அன்று டயகம நெட்போன் பிரதேச பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது,கோட்டாபய ராஜபக்ச என்பவர் அரசியல்வாதி கிடையாது, அவர் சிறந்த நிர்வாகி. எனவே, அவருக்கு வாக்களித்தால் இலகுவில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தேர்தலின்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.எனினும்,140 ரூபா, 100 ரூபா, இறுதியில் 50 ரூபா என அறிவிப்புகளை மட்டுமே விடுத்து அதனை பெற்றுக்கொடுக்காத தரப்பின் வேட்பாளருக்கு வாக்குகளை அள்ளி வழங்கினீர்கள். ஆனால், தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே வெற்றிபெற்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று, சிறுபான்மையின மக்கள் மீதும் மதிப்புள்ளதால் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்தார்.

இதற்கான ஒப்பந்தம் பெப்ரவரி 13 ஆம் திகதி கைச்சாத்திடப்படவிருந்தாலும் சில சரத்துகள் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருந்ததால் அவற்றில் திருத்தம் மேற்கொள்ளுமாறு பணிப்பு விடுத்தேன். இதன்காரணமாகவே நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்தியாவில் இருந்து திரும்பிய கையோடு இது தொடர்பில் வானொலி ஊடாக அறிவிப்பு விடுத்தேன்.

எது எப்படியிருந்தபோதிலும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி.இந்நிலையில் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்றவர்களுக்கு ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கே அது பற்றி கதைக்கும் உரிமை இருக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அரசாங்கத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு செல்லாக்காசாக இருந்த அந்த ஆறுபேரும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.ஐயா காலத்தில் இருந்து காங்கிரஸ்தான் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது. எதிர்காலத்திலும் நாம்தான் வாங்கிக்கொடுப்போம். அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.

கல்வி மற்றும் அபிவிருத்திகள்

மலையகத்தில் கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு மறைந்த ஐயா சௌமியமூர்த்தி தொண்டமானும், காங்கிரசுமே தீவிரமாக செயற்பட்டது. இது அன்றிருந்த மக்களுக்கு தெரியும். ஆனால் இன்று சிலர் மாறுபட்ட கோணத்தில் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

கல்வி மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் எம் சமூகம் இன்று முன்னேறியுள்ளது. அரச துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் எம் பிள்ளைகள் தொழில் புரிகின்றனர். இது முன்னேற்றகரமான மாற்றமாகும்.அதேபோல் மூன்று மாதங்கள் கடந்தும் இந்த ஆட்சியில் ஒன்னும் நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் அதன் உண்மை தன்மை பற்றி அறிந்துகொள்வதே சிறப்பு.

உதாரணமாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 ஆயிரம் வீடகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகளை கட்டுவதற்கு இந்திய உதவியளிக்கும். ஆனால் வீடுகளுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கமே செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் கருத்தாக இருந்தது.

கடந்த நான்கரை வருடங்களில் வீடுகள் கட்டப்பட்டாலும் தண்ணீர் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஏட்டிக்குப்போட்டியாக கட்டபட்டவை போலவே அவை உள்ளன.குறிப்பாக ஒரு தோட்டத்தில் வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தால் அங்கு லயன்களை முழுமையாக இடித்துவிட வேண்டும் என்பதே எமது திட்டமாகும்.வீடுகளை நிர்மாணிக்க ஆரம்பிக்கும்போத வீதி,மின்சாரம், நீர் ஆகியவற்றை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளியிடம் வீடுகள் கையளிக்கப்படும்போது முழு வசதிகளும் இருக்கும்.

இந்திய பயணத்தின்போது பாரத பிரதமருடன் கலந்துரையாடினேன். அறிக்கை அனுப்புமாறும் தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். முதலில் 4 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் நோர்வூட் வந்திருந்தபோது 10 ஆயிரம் வீடுகள் வழங்கப்படும் என பாரத பிரதமர் அறிவித்தார். தற்போது மேலும் 10 ஆயிரம் வீடுகளை நான் கேட்டுள்ளேன். இதற்கான அறிக்கையே கோரப்பட்டுள்ளது. மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் சாதகமான பதில்கள் கிடைத்தன.

வெலிஓயாவில் 16.02.2020 அன்று 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது. கட்சிபேதம்பாராது தேவைகளின் அடிப்படையிலேயே பயனாளர்கள் தேர்வு இடம்பெறும்.அதுமட்டுமல்ல ஒவ்வொரு பிரதேசத்துக்கும் அபிவிருத்திக்காக 400 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மைதானங்கள் புனரமைக்கப்பட்டுவருகின்றன. இப்படி பல வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தேவையான இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.