• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

சூறாவளி தொடர்பான சிவப்பு எச்சரிக்கை: பாதிப்பு இருக்கும் பிரதேச விபரங்கள்

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக மாறி நாளை மாலை கிழக்குக் கரை தரையை தட்டலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை எச்சரித்துள்ளது.

இது நாளை மாலை ஐந்து மணிக்குப் பின்னர், முல்லைத்தீவிற்கும் மட்டக்களப்பிற்கும் இடைப்பட்ட பகுதியில் தரைதட்டக்கூடிய சாத்தியம் உள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

இது பற்றி திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தக் காலநிலையின் விளைவாக நாட்டை சூழவுள்ள கடல் கொந்தளிப்பானதாக மாறலாம். சில மாகாணங்களில் கடும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும், கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோரும் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை(டிசம்பர் 02ஆம் திகதி) மாலையில் அல்லது இரவில்கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல்இ மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்குஇ வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். -(3)