• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

சீனாவின் வேட்டை நிலத்தில் டோவாலின் இலக்கு வெற்றிபெறுமா?

யதீந்திரா

கடல்பாது பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றிற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இலங்கை வந்திருக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்வது எனது நோக்கமல்ல. டோவால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முன்னைநாள் இந்திய உள்ளக புலனாய்வு அமைப்பின் இயக்குனராக (Intelligence Bureau) இருந்தவர். இதற்கப்பால் அவர் தொடர்பில் அதிகம் விடயங்கள் வெளியில் வருவதில்லை. மிகவும் அரிதாக நிகழ்வுகளில் தோன்றுவதால், அரிதாகப் பேசும் டோவால் அண்மைய நிகழ்வொன்றில் – இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால் இந்தியா நிச்சயம் இந்திய மண்ணியிலும் அதே வேளை வெளிநாட்டு மண்ணிலும் சண்டையிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தொழில் முறையில் உளவுத் துறையைச் சேர்ந்த டோவால் இந்திய மட்டத்தில் நிஜ வாழ்வின் ஜேம்ஸ்பாண்ட் (real life James Bond) என்று வர்ணிக்கப்படுபவர். உளவுப் பணிகளுக்கான பாக்கிஸ்தானில் ஒரு முஸ்லிமாகவே ஜந்து வருடங்கள் வாழ்ந்து, பாக்கிஸ்தானிய உளவுத்துறையின் கண்களில் மண்னைத் தூவியவர். பி.ஜே.பி வட்டாரத்தில் இவரை நவீன சாணக்கியன் என்றும் சிலர் வர்ணிப்பதுண்டு. பிரதமர் மோடி நிர்வாகத்தின் வெளிவிவகாரக கொள்கையில் இவரது செல்வாக்கு அதிகம் என்றே கூறப்படுகின்றது. வெளிவிவகாரக் கொள்கையில் பாதுகாப்பை அதிகம் முதன்மைப்படுத்தும் டோவால், தன்னை ஒரு ராஜதந்திரியாக கருதுவதைவிடவும் பாதுகாப்பிற்கான நபராகவே அடையாளப்படுத்துவதுண்டு. 2017 இல் கோட்டபாய ராஜபக்ச வழங்கிய நேர்காணல் ஒன்றில், டோவால் தங்களுடன் ஒரு புலனாய்வு நபர் போல் நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார். ஒரு புலனாய்வு நபர் புலனாய்வாளராக நடந்து கொள்வதில் ஆச்சிரியமில்லை.

தற்போதுள்ள ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தை பொறுத்தவரையில் டோவால் அவர்களது மனதால் நேசிக்கப்படும் ஒரு நபரல்ல. இதனை இந்தியாவும் அறியும். ஏனெனில் டோவால் தொடர்பில் ராஜபக்சக்கள் ஏற்கனவே பாடங்களை படித்திருக்கின்றனர். 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் சொல்லப்பட்ட போதிலும், அதன் மூளையாக இருந்தவர் டேவால் என்பது அதிகம் வெளியில் உரையாடப்படாத விடயமாகவே இருக்கின்றது. இதற்கு நான் ஏற்கனவே கூறியது போன்று, டோவால் அதிகம் பொது நிகழ்வுகளில் தோன்றும் நபரல்ல. ஒரு வகையில் திரைப்பட இயக்குனர் போன்று. பொதுவாக திரைப்பட்டத்தில் நடிப்பவர்களே வெளியில் தெரிவர். ஆனால் இயக்குனரை சிலர் மட்டுமே அறிந்திருப்பர்.

2015 ஜனவரியில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, இந்தியாவிலிருந்து வெளிவரும் சிட்டிசன் என்னும் இணையத்தளம் இதற்கு பின்னால் டோவாலின் மூளையிருந்தாக குறிப்பிட்டு எழுதியிருந்தது. வேறு சில தளங்களிலும் இந்த விடயம் வெளியாகியிருந்தது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதிகமாக சீனாவை நோக்கி சாய்து கொண்டிருந்த ஒரு சூழலில்ததான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச உடனடியாகவே இந்திய உளவுத்துறையான றோவின் மீதே குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்ச எந்தவொரு இடத்திலும் டோவாலின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் 2017இல் கோட்;டபாய ராஜபக்ச வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது, பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்தே தங்களிற்கும் புதுடில்லிக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும், டோவால், சீனத் திட்டமான துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுமாறு தன்னிடம் இரு முறைகள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் தங்களுடன் ஒரு ராஜதந்திரியாக நடந்து கொள்ளாமல் ஒரு புலனாய்வு நபராக நடந்துகொண்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார். எங்களுடன் இவ்வாறு நடந்து கொண்டவர்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியமை தொடர்பில் அமைதியாக இருக்கின்றார்கள் என்றும் கோட்டபாய குற்றம் சாட்டியிருந்தார்.

Gota-and-Ajith-Doval

அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, சீனாவை வேட்டையாடும் மிருகம் என்று குறிப்பிட்டதுடன், இலங்கையின் நிலம் மற்றும் கடலை வேட்டையாடும் நோக்கில் சீனா நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் டோவாலின் உயர் மட்ட சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட விடயம் பி.ஜே.பி. இந்தியாவின் நகர்வுகளில் ஏற்பட்ட ஒரு பின்னடைவே. ஏனெனில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட, சீனாவின் வேட்டையாடும் நடவடிக்கைகளை தடுத்து, இலங்கைக்குள் சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்க முடியவில்லை. டோவால் முயற்சித்தது போன்று, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தடுத்துநிறுத்த முடியவில்லை. மாறாக, ரணில் அரசாங்கம் நாட்டை மேலும் சீனாவின் பிடிக்குள் தள்ளிவிடும் வகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதுடன், 15000 ஏக்கர் நிலத்தையும் சீனாவிற்கு வழங்கியிருந்தது. இந்தியாவின் உடனடி அயல் நாடொன்றில் றோமின் நில அளவிற்கு ஒப்பான இலங்கையின் நிலப்பகுதி, தற்போது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது.

சிலர் ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் டோவால் இருந்தாரா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால், அவ்வாறானதொரு கருத்துருவாக்கத்தை செய்வதிலும் ராஜபக்ச ஆதரவு தரப்புக்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. இந்தியாவிற்கு எதிரான சதிக் கோட்பாட்டுருவாக்க முயற்சிகளிலும் பல தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குள் சிலதமிழ் குழுக்களும் அறிந்தோ அறியாமலோ ஈடுபடுவதுண்டு.

2017இல் சந்திரபெரும எழுதிய கட்டுரை ஒன்றில் இது தொடர்பில் விவாதித்திருந்தார். சந்திரபெரும ‘கோட்டாவின் யுத்தம்’ என்னும் நூலை எழுதியவர். டோவாலின் அணுகுமுறையை சரி செய்ய முடியாத தோல்வி என விபரித்திருக்கும் சந்திரபெரும, டோவால் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தி இறுதியில் எதனையும் அடையவில்லை. அதற்கு பதிலாக இந்தியாவின் நலன்கள் மேலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ராஜிவ் காந்தி 1980களில் எதனை செய்தாரோ அதனையே டோவால் 2014இல் செய்தார் ஆனால், அவர்கள் எதிர்பார்த்த விளைவுகளுக்கு மாறான விடயங்களே இடம்பெற்றன. தர்க்க ரீதியில் நோக்கினால் இந்த வாதத்தை மறுதலிக்க முடியாமல் போகும் ஆனால் ராஜீவ் காந்தியின் அணுகுமுறையுடன் 2015 ஆட்சி மாற்றத்தை ஒப்பிடுவது முற்றிலும் தவறானது. சந்திரபெரும போன்றவர்கள் இந்திய எதிர்ப்பு மனோவாத்திலிருந்தே விடயங்களை ஆராய முற்படுகின்றனர். இவர்கள் எவருமே மகிந்த ராஜபக்ச சீனாவை நோக்கி சாய்ந்து சென்றமை தொடர்பில் விமர்சிக்கத் துனிவதில்லை.

பொம்பியோ சீனா தொடர்பில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துச் சென்ற இரு தினங்களிலேயே அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆளும் பொதுஜன பெரமுன கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, ஆளுகை பகிர்வு (புழஎநசயெnஉந ளாயசiபெ) தொடர்பில் மகாநாடு ஒன்றை செய்திருந்தது. பொதுஜன பெரமுனவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளுகை தொடர்பில் உறவாடுகின்ற அளவிற்கு சீனா இலங்கையில் கால்பதித்திருக்கின்றது என்பதுதானே இதன் பொருள். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் பலவீனப்படுத்தும் நகர்வுகளிலும் கொழும்பு ஈடுபடுகின்றது. இதன் ஆரம்பம்தான், 13வது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பொருத்தமற்றது என்னும் வாதம் வெகுசனப்படுத்தப்படுகின்றது. ஒரு விடயத்தை இல்லாமலாக்குவதற்கு முதலில் அது தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை பரப்ப வேண்டும் என்னும் ஒரு தந்திரோபாயத்தையே கொழும்பு கைக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்திய -இலங்கை ஒப்பந்தம்தான் இந்தியாவிடம் எஞ்சியிருக்கின்ற ஒரேயொரு துருப்புச் சீட்டு – அதனையும் இந்தியா இழந்து போகுமானால் – அதன் பின்னர் எதனைக் கொண்டு இலங்கையை கட்டுப்படுத்துவது?

தன்னையொரு பாதுகாப்பு நபராக முன்னிறுத்தும் டோவால் இலங்கை தொடர்பான சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார். இலங்கை தொடர்பான விடயங்கள் தங்களை மீறிச் செல்லாது என்னும் அடிப்படையிலேயே இதுவரையான இந்திய அணுகுமுறை இருந்திருக்கின்றது. இதற்கு இந்தியாவிற்கு அருகாமையில், சில கிலோமீற்றர் தூரத்தில் இலங்கை அமைந்திருப்பதும் ஒரு காரணம். ஒரு எல்லைக்கு மேல் இலங்கையால் தங்களுக்கு எதிராக பயணிக்க முடியாத – அவ்வாறு பயணிக்க முற்பட்டாலும் அதனை மிக இலகுவில் கட்டுப்படுத்திவிட முடியுமென்னும் பர்வை சவுத் புளொக்கிடம் இருக்கலாம் ஆனால் இப்படியொரு பார்வையில் இருந்தியா இருக்கின்ற போதுதானே, இந்த விடயங்கள் அனைத்தும் நடந்தேறியிருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன. இதனையும் தாண்டி இந்தியாவிடமுள்ள பிரமாஸ்திரம் அதன் இராணுவ பலம் ஒன்றுதான். ஆனால் சீனாவின் திட்டங்கள் ஏதோவொரு வகையில் ஆயுதம் தரிக்காத படைத்தளங்களாகவே இருக்கப் போகின்றன. இந்த நிலையில் இலங்கை விடயத்தை இந்தியா எவ்வாறு கையாளக் போகின்றது?

doval-modi-main

2009இல் டோவால் எழுதிய கட்டுரை ஒன்றில், சரியான மூலோபாயத்தினால் மாவோயிசத்தை இந்தியாவில் தோற்கடிக்கலாம் என எழுதியிருந்தார். ஆனால் இந்தியாவின் அயல்நாடுகளுக்குள் வேகமாக பரவிவரும் ஜின் பிங்கிசத்தை தோற்கடிப்பதற்கான மூலோபயம் என்ன? இலங்கையின் தென்பகுதியில் சீனா வலுவாக கால}ன்றியிருக்கின்ற நிலையில் இப்போது இந்தியாவின் பிடிக்குள் நிரந்தரமாக வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு மட்டுமே இருக்கின்றது. தமிழ் மக்கள் இந்தியாவுடன் நிற்கவே விரும்புகின்றனர். அதே வேளை வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் பெரும்பாண்மையினர் இந்துக்களுமாவர். ஒரே நேரத்தில் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒரு பகுதியாக தமிழர்களின் பாரம்பரிய நிலமான வடக்கு – கிழக்கு மட்டுமே இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டே 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாகவே இல்லாமலாக்கும் முயற்சியில் கொழும்பு கவனம் செலுத்தி வருகின்றது. இதனை நேரடியாக செய்வதிலுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டே, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றனர். கொழும்பின் ஒரு கல்லில் பல காய்கள் விழுத்தும் தந்திரேபாயத்தை டேவாலின் தந்திரேபாயம் தோற்கடிக்குமா?