• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களை தகுதியுடையவர்களாக மாற்றவேண்டும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள 4065 முன்பள்ளி ஆசிரியர்களில் 571ஆசிரியர்கள் மட்டுமே ஏதாவது ஒரு கொடுப்பனவினை பெறுகின்றனர்.ஏனைய 3500 ஆசிரியர்களும் எதுவித கொடுப்பனவும் இன்றி கடையாற்றிவருவதாகவும் அவர்களும் கொடுப்பனவு ஒன்றை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் டி.குணரெட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும் விரிவுரையாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த ஆண்டை கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகமும் இணைந்து ஆசிரியர்களை மேம்படுத்தும் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது.அதன் முதலாவது கட்டமே இந்த டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்படும் விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தில் 4065 முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.1832பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகள் இயங்குகின்றன.இந்த அனைத்து ஆசிரியர்களும் கல்வித்தகமைபெற்றவர்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.முழுமையான தகுதியை நாங்கள் பெறவில்லை.

இன்னு 1600 ஆசிரியர்கள் டிப்ளோமா தரத்தினைபெறவேண்டியுள்ளது.அத்துடன் கா.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியடையாதவர்களும் பாலர் பாடசாலை ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர்.பல ஆண்டுகாலமாக சேவையில் ஈடுபட்டுள்ள அவர்களையும் வழப்படுத்துவதற்கு திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம்.

இந்த ஆண்டு 1000முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறியை பூர்த்திசெய்யும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.டிப்ளோமா பாடநெறியை பெறும்போதே முன்பள்ளி ஆசிரியர்கள் பூரணத்துவமிக்க ஆசிரியர்களாக கருதப்படுவார்கள்.கல்வியுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள்பெறவேண்டும் என்பதற்காக ஆசிரியர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை இந்த ஆண்டு மேற்கொண்டுவருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.முன்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சிகொள்ளும் ஆண்டை பிரகடனப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

20வருடங்களுக்கு முன்னர் நினைத்தவாறு பாலர் பாடசாலைகளை அமைத்துவந்தோம்.ஆனால் இன்று அவ்வாறு அமைக்கமுடியாது.பாலர் பாடசாலை பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் பணிப்பின்பேரில் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்.பாலர் பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் வகையிலேயே இந்தநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களை தகுதியுடையவர்களாக மாற்றவேண்டும்.இந்த ஆண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒளிமயமான ஆண்டாகும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 4065 முன்பள்ளி ஆசிரியர்களில் 571 ஆசிரியர்கள் மட்டுமே ஏதோவொரு வகையில் கொடுப்பனவினை பெற்றுவருகின்றனர்.ஏனைய 3500 ஆசிரியர்களும் எதுவித கொடுப்பனவும் இன்றியே பணியாற்றிவருகின்றனர்.அவர்களும் கொடுப்பனவினைபெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அதற்கு ஆசிரியர்களும் தங்களது கல்வித்தகமையினை பூரணப்படுத்தியிருக்கவேண்டும்.

n10