செய்திகள்

இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு வடக்கு கிழக்கு மாத்திரமன்றி தென்பகுதியிலும் காணப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன், காதர் மஸ்தான், சாந்த பண்டார, சந்திம வீரக்கொடி, எச்.எம்.எம்.ஹரிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்விரோத மீன்பிடி விவகாரம் தொடர்பில் தொலைபேசி ஊடாகவும், கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் ஏற்கனவே பல தடவைகள் பேசப்பட்டுள்ளது. அண்மையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒன்லைன் முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் எல்லைதாண்டிவரும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கு கடற்படையினர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இருந்தபோதும் கொவிட் சூழலால் அவர்களின் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடற்படையினரின் உதவியைப் பெற்றாவது இந்திய மீனவர்களின் வருகையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டினர். இது விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கிரிந்த மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி பணிகளை விரைவில் முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி வலியுறுத்தினார். இது தொடர்பில் அமைச்சு ஏற்கனவே கவனம் செலுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். ஒலுவில் துறைமுகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதனை மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஹம்பாந்தோட்டை றக்கவவ பிரதேசத்தில் ஆரம்பிக்கத் திட்மிடப்பட்டிருந் கிரப் சிட்டி திட்டத்துக்காகப் பெறப்பட்ட இடம் தொடர்பில் சட்டச்சிக்கல் காணப்படுவதுடன், இதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து தனியார் துறையுடன் இணைந்து இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

-(3)