செய்திகள்

இந்தியாவின் எல்லைக்கோடும் தமிழர் தரப்பு செய்ய வேண்டியதும்?

யதீந்திரா

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஐபக்சவிற்கும் இடையில் கானொளி வாயிலாக, உத்தியோகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.nஐயசங்கர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். மோடியின் தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம், அயல்நாடுகள் தொடர்பில் கைக்கொண்டு வரும் சாகர் SAGAR doctrine (Security and Growth for All in the Region) கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கு முன்னுரிமைளிக்கும் அறிவிப்பை இந்த சந்திப்பின் போது வெளியிட்டிருந்தது. இதனை சரியாக விளங்கிக் கொள்ள முடியாத சில தமிழ் உணர்வாளர்கள் இந்தியாவின் அணுகுமுறையை விமர்சித்திருந்தனர். சில விடயங்களை இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் அடிப்படையில் நோக்க வேண்டுமேயன்றி தமிழ்த் தேசிய கண்கொண்டு நோக்குவது தவறானது.

முதலில் அயல்நாடுகள் என்பதுதான் இந்த கோட்பாட்டின் இலக்கு. இதே போன்றதொரு அறிவிப்பையே இலங்கையின் வெளிவிவகாரச் செயலர் அட்மிரல். கலாநிதி.nஐயநாத் கொலம்பகேயும் அண்மையில் அறிவித்திருந்தார். உண்மையில் மோடி தலைமையிலான BJP இந்தியாவின் சாகர் கோட்பாட்டுடன்தான் இலங்கையும் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி அறிவிப்பை கொலம்பகே வெளியிட்டிருந்தார். அதாவது, பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவிற்கு முதலிடம் என்பதுதான் தமது கொள்கை நிலைப்பாடு என அவர் அறிவித்திருந்தார். அதே வேளை கொலம்பகே குறிப்பிட்டிருந்த பிறிதொரு விடயம் மிகவும் முக்கியமானது. அதாவது, ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச இந்த கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாவும் கொலம்பகே தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும் மோடி குறிப்பிட்டிருக்கின்றார். இந்த சந்திப்பை தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடக நிலையத்தினால் வெளியிடப்பட்ட இருதரப்பு ஊடக அறிக்கையிலும் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டது. அதாவது, தமிழ் மக்களுக்கான அரசியலமைப்பின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதன் ஊடாக – ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, புதிய அரசாங்கம் பணியாற்ற வேண்டுமென்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும், அதே வேளை நல்லிணக்கம் மற்றும் சமாதான முன்னெடு;ப்புக்களை முன்கொண்டு செல்வதற்கு, அரசியல் யாப்பின் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது அவசியமானது என்று, பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இலங்கையின் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பின்னர் ஊடக நிறுவனத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, மோடி 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் வலியுறுத்தியதை மகிந்த ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

பொதுஐன பெரமுன பெருபாண்மை ஆதரவுடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 13வது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்திருக்கின்றன. ஒரு சாரார் அதற்கு எதிராகவும், இன்னொர சாரார் அதற்கு ஆதரவாகவும் பேசிவருகின்றனர். இந்தியாவிற்கான அமைச்சரவை அதிகாரத்துடன் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொரகொட மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டுமென்னும் கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்துதான் மொரகொட மீளவும் அரசியல் அரங்கிற்குள் நுழைந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், ராஐபக்ச சகோதரர்களின் அரசாங்கம் புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பிலும் பேசிவருகின்றது. புதியதொரு அரசியல் யாப்பு வருமாக இருந்தால் அதன் பின்னர் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் விவாதிக்க வேண்டிய தேவையிருக்காது. இவ்வாறான வாதப்பிரதி வாதங்களுக்கு மத்தியில்தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். அவ்வாறு கூறுவதற்கான முழு உரித்தும் இந்தியாவிற்குண்டு. அந்த உரிமையை நிராகரிக்கும் உரிமை இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு இல்லை.

இலங்கை – இந்திய உறவுகள் மிகவும் சுமூகமாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது அவ்வாறானதொரு உறவு கொழும்பிற்கும் புதுடில்லிக்கும் இடையில் இருந்தது. அதற்கு பி;ன்னால் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையின் தனிப்பட்ட செல்வாக்கும் இருந்தது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தொடர்பில் காங்கிரஸ் இந்தியாவிடம் எந்தவொரு பரிவுணர்வும் இருந்திருக்கவில்லை. இந்தச் சூழலை மகிந்த ராஐபக்ச தரப்பினர் மிகவும் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் யுத்தத்திற்கு பின்னர் மகிந்த ராஐபக்ச கைக்கொண்ட வெளிவிவகார அணுகுமுறைகளால் புதுடில்லி மகிழ்ச்சியை இழந்தது. ஏனெனில் விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கைத் தீவில் மிகவும் வேகமாக சீனாவின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வதை, இந்திய மூலோபாய சமூகம் அதிருப்தியுடனேயே நோக்கியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2015இல் மகிந்த ராஐபக்ச ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். 2014இல் அதிகாரத்திற்கு வந்த BJP அரசாங்கத்திற்கும் ராஐபக்ச சகோதரர்கள் தலைமையிலான கொழும்பிற்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்திருக்கவில்லை. தங்களது உடனடி அயல்நாடொன்றிற்குள் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்னும் கோபத்துடனேயே கொழும்மை BJP அணுகியிருந்தது. 2017இல் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்துடன் பேசுகின்ற போதே இந்த விடயங்களை கோட்டபாய போட்டுடைத்தார்.

Modi and Rajapaksha

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் BJP அரசாங்கம் வந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் டோவால் நியமிக்கப்பட்டார். டேவால் ஒரு புலனாய்வு நபர் (Intelligent Man) போன்றே எங்களுக்கு தெரிந்தார். சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை நிறுத்துமாறு அவர் இரண்டு முறை என்னிடம் வலியுறுத்தியிருந்தார். அதே போன்று தெற்கு கொள்கலன் முனையத்தை சீனாவிடமிருந்து விடுவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த தகவல்கள் BJP  ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து புதுடில்லிக்கும் கொழும்பிற்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடான தொடர்பாடலையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு நிலையில்தான் மீண்டும் ராஐபக்ச சகோதரர்கள் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றனர். இதன் காரணமாகவே இந்தியாவை கையாளுவதை அவர்களின் முதன்மையான வெளிவிவகார இலக்காகக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இது BJP ஆட்சியின் விளைவு என்று பார்த்தால் அது தவறாகிவிடலாம். இந்திய வெளியுறவு கொள்கை முடிவுகளில் இந்திய உளவுத்துறையான றோவின் பங்கு முதன்மையானது. அந்த அடிப்படையில் ராஐபக்ச தலைமையிலான கொழும்பின் மீதான அதிருப்தி புதுடில்லியில் ஏற்கனவே இருந்த ஒன்று. அந்த கொள்கை நிலைப்பாட்டையே BJP கையில் எடுத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலில் தமிழர் தரப்பு என்ன செய்யலாம்? இரண்டு விடயங்களில் தமிழர் தரப்பு அதன் கவனத்தை செலுத்தலாம். ஒன்று, இந்தியாவிற்கு உரித்துள்ள விடயமான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அங்கமான 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாக கைக்கொள்ளும் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இது தொடர்பில் கருத்தொருமித்து இந்தியாவை அணுக வேண்டும். இரண்டு, வடக்கு கிழக்குடன் இந்தியா அதிகம் தொடர்பாடக் கூடிய திட்டங்களை முன்மொழிய வேண்டும். சீனா வலுவாக காலூன்றிவிட்ட நிலையில் அதனை சமநிலைப்படுத்தும் திட்டங்களிலேயே புதுடில்லி கவனம் செலுத்தலாம். அதில் தமிழர்களும் கரிசனையுடன் இருக்கின்றனர் என்பதை காண்பிக்கும் வகையில் தமிழ்த் தலைவர்கள் செயற்பட வேண்டும்.

அண்மையில் இடம்பெற்ற மோடி- மகிந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பௌத்த உறவை வலுப்படுத்துதற்காக 15 மில்லியனை மோடி அறிவித்திருக்கின்றார். இது எதனை உணர்த்துகின்றது? முடிந்தவரைக்கும் கொழும்மை ஒரு எல்லைவரைக்கும் அரவணைக்கும் தந்திரோபாயத்தையே தற்போதைய இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது. அதே வேளை தமிழர் பிரச்சினையில் இந்தியாவிற்குள்ள தலையிடும் உரித்தையும், இந்தியா இழக்க விரும்பவில்லை.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டுதான் தமிழர் தரப்பு விடயங்களை கையாள வேண்டும். இப்போது தமிழர் தரப்பு உடனடியாக செய்ய வேண்டியது, இந்தியாவை அணுகுவதை ஒரு பிரதான அரசியல் வேலைத்திட்டமாக வகுக்க வேண்டும். இதற்கென அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், புத்திஜீவிகள் தரப்பினர் என ஆற்றல்மிக்க ஒரு அணியை உருவாக்க வேண்டும். சித்தார்த்தன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்களுக்கு இந்த விடயத்தில் அனுபவங்கள் உண்டு. ஆனால் இவர்கள் மட்டும் போதாது. இவர்களோடு இந்திய வெளிவிவகார விடயங்களில் அறிவுள்ள புலமையாளர்களையும் இணைத்து இவ்வாறானதொரு குழுவை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த விடயத்தை சரியாக கையாள முடியாது போனால் இந்தியாவின் ஈடுபாடும் வெறும் உதட்டளவு தலையீட்டுடன் சுருங்கிவிடலாம். இந்தச் சூழலையும் கொழும்பு அவர்களுக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்ளும்.